மன்னராட்சியா? மக்களாட்சியா?



            இப்பொழுது நடப்பது மக்கள் ஆட்சி. மக்களால் தேர்தெடுக்கப்படும் நபர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மக்கள் நலனுக்காக பாடு படுவார்கள். மக்கள் நினைத்தால் அவர்களை தூக்கி எறியலாம். தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்கலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நடப்பவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நடப்பது மன்னராட்சி தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது

மன்னர் ஆட்சியில் சர்வ அதிகாரம் படைத்த சக்கரவர்த்தி இருப்பார். அவருக்கு கீழே பல குறுநில மன்னர்கள் இருப்பார்கள். சக்கரவர்த்தியின் திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றுவது அவர்களின் கடமை. சில சமயங்களில் குறுநில மன்னர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் சக்கரவர்த்தியையே ஆட்டி வைக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் குறுநில மன்னர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து அவர்களில் ஒருவரை சக்கரவர்த்தியாக்குவதும் உண்டு. பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இந்த சம்பவங்கள் மிகப் பரிச்சயமானவை.
இப்பொழுதும் பிரதமர் சர்வ அதிகாரம் படைத்தவர். குறுநில மன்னர்களாய் மாநில முதல்வர்கள். அப்பொழுதும், இப்பொழுதும் வாரிசுகள் பதவிக்கு வருவது தவறாமல் நடக்கிறது.

மன்னர்கள் வீதிக்கு வரும்பொழுது மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. இப்பொழுதும் அப்படியே.
மன்னர்களை விமர்சித்த கவியரசர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் விமர்சித்தாலும் அதை செவிமடுத்த அரசர்கள் மிகக் குறைவு. கவிஞர்களுக்கு தண்டனை கொடுத்தவர்களே அதிகம். இப்பொழுதும் தேவைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் தண்டனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் அல்லது தாக்கப் படுகிறார்கள்.
சில சமயங்களில் சக்கரவர்த்தியையோ அல்லது குறுநில மன்னர்களையோ ஆட்டி வைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள் அருகிலேயே இருப்பார்கள். அவர்களை மீறி மன்னர்களால் கூட எந்த விதமான முடிவும் எடுக்க முடியாது.
 இப்பொழுது உள்ள நிலைமையைப் பற்றி கூறவேண்டியது இல்லை.
மக்கள் கொல்லப்பட்டாலும் மன்னர்கள் உயிரோடு இருப்பது அவசியம் எனக் கருதப்பட்டது. இப்பொழுதும் பொது மக்களின் உயிரை விட பதவியில் இருப்பவர்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. அவர்களை காப்பாற்ற நினைத்து அப்பாவி பொதுமக்களை தண்டிப்பதும் நடந்து வருகிறது.
மன்னாட்சியில் பிற நாடுகளின்  மீது படையெடுத்து கொள்ளை அடித்த சம்பவங்கள் உண்டு. மாறாக இப்பொழுது சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்து, அவர்கள் உழைப்பில் வரும் வருமானத்தை வரியாக வசூலித்து அதை பல கணக்குகள் காட்டியும், காட்டாமலும் கொள்ளை அடித்து வரும் சம்பவங்கள் நடை பெறுகின்றன.
ஒரு மன்னர் போரில் தோற்று இன்னொரு மன்னர் வருகையில் பழைய மன்னரை சிறையில் தள்ளுவது வழக்கம்.
ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வரும்பொழுது குற்றங்கள் சுமத்தி சில நாட்களாவது சிறையில் தள்ளும் வழக்கம் இப்பொழுதும் உண்டு.
மன்னராட்சியில் கூட இல்லாத சில சர்வாதிகார நடவடிக்கைகள், கொடுங்கோல் ஆட்சிகள் இப்பொழுது நடைபெறுவதுண்டு.
மக்களாட்சியின் மிக முக்கியமான அம்சமாக கருதப்பட்டது சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் உண்மையில் சட்டம் இல்லாதவர்களுக்கு ஒருமாதிரியாகவும், பணம் படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒருமாதிரியாகவும் இருக்கிறது என்பதே உண்மை. பதவியில் இருப்பவர்கள் கோடி, கோடியாக ஊழல் செய்தாலும் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதும். அவர்கள் செய்ததை நியாயப்படுத்த புதிய சட்டங்களைக் கூட இயற்றுவார்கள்.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ ஊழல் வழக்குகள் நடைபெற்றுள்ளன, எந்த வழக்கிலும் பதவியில் இருந்த, அதிகாரம் படைத்தவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்கள் ஊழல் செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு செய்தி கூட இல்லை.
சாதாரண மனிதர்கள் 50 ம் 500 ம் லஞ்சமாக வாங்கினால், உடனடி தண்டனை, வேலை பறிப்பு, சிறைவாசம்.
கோடிகளில் கொள்ளை அடித்தால் ஏ.சி காரில் அழைத்துச் சென்று, விசாரணை செய்து ஏ.சி சிறையில் அடித்துப் பின் ஜாமீனில் விட்டு விடுவார்கள். வழக்கு கொஞ்சநாட்கள் நடைபெறும். பின் மக்கள் மறந்து விடுவார்கள் அவர்களும் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்.
மந்திரி என்பவர் மக்கள் பிரதிநிதி. மக்களுக்கு தொண்டு செய்யவே அவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்
மன்னர்களை சந்திப்பதே தெய்வத்தை தரிசித்தது போல இருந்து வந்தது.
. இப்பொழுதும் மந்திரியை சந்திப்பது கடவுளை சந்திப்பது போலத்தான் . நடுவில் ஏகப்பட்ட பூசாரிகளும் உண்டு. இதையெல்லாம் மீறி மந்திரியை சந்தித்து விட்டாலே வாழ்வின் அடைய முடியாத லட்சியத்தை அடைந்து விட்டது போலத்தான். பின் நமது காரியங்களை அடைய நாம் நிறைய விலை கொடுக்க வேண்டும்.
இப்பொழுது வார்டு கவுன்சிலர்கள் கூட மந்திரியை விட அதிகாரம் படைத்தவர்களாக இருப்பது போல நடந்து கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம் தான். இப்போது உள்ள மன்னர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கண்டிப்பாக தேர்தல் என்ற ஒன்றை சந்திக்க வேண்டி உள்ளது. ஆரம்ப காலங்களில் மக்கள் நலனுக்கு பாடுபட்டவர்களை மக்கள் தேர்தெடுத்து வந்தனர். சுயநலமில்லாத எத்தனையோ தலைவர்கள் பெரும் பதவிகளை அமர்ந்து எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மக்கள் நலனை விரும்பி பதவியின் தன்மையை உணர்ந்து பல திட்டங்களை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர்.
எப்பொழுது இந்த பதவிகள் சர்வ அதிகாரம் படித்தவை, அவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டார்களோ அப்பொழுது ஆரம்பித்தது மன்னராட்சி.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், எதற்கு, யாருக்குச் சேர்க்கிறோம் என்று தெரியாமலேயே மலை போல பணத்தை சேர்க்கவும் தங்கள் பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து, தொண்டர்களுக்குப் பதில் குண்டர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, முறைகேடு, மோசடி  போன்றவை இட்லி, தோசை, பூரி போல அன்றாட வாழ்க்கையில் வழக்கமான, பழக்கமான விசயங்கள் ஆகி விட்டன.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கே ஓட்டு போடவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டு விட்டது.
ஓட்டு போட விருப்பம் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களே அதிகம். அவர்களின் ஓட்டுகளும் வேறு நபர்களால் போடப்பட்டு விடும்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, மிரட்டி ஓட்டு போட வைப்பது, அவர்களுடைய தேவைகளை வைத்து பணிய வைப்பது என்று `பல வகைகளிலும் பலவந்தமாக ஓட்டு பெறப்படுகிறது.
ஆக நாம் அளிக்கும் ஓட்டுக்கும் உரிய மரியாதை இல்லை.
இவைகளில் இருந்து நமக்கு எப்பொழுது விடுதலை?
சுயநலமில்லாத, நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை காட்டும் தலைவர்கள் வழி நடத்த, இளைஞர்கள் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக நமது அப்துல் கலாம் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் அமர்ந்து விட்டார். அவர் போன்ற தன்னலமில்லாத தலைவர்கள் வழி நடத்திட வேண்டும்.
அப்பொழுதுதான் நம்மிடம் உழைப்பை சுரண்டி, நமது வருமானத்தையும் வரியாகப் பெற்று, அதில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.
           கனவு காணுவோம், மக்கள் ஆட்சி அமைய.!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Sermuga Pandian said...

Dear Rajesh
Your comparison between Mannar Aaatchi and Makkal Aatchi is superb and thought-provoking.Continue your writing on such matters.
P.Sermuga Pandian

Rajesh said...

thank u sir

Post a Comment