இப்பொழுது ஆளும் அரசால் இலவச திட்டங்கள் வாரி வாரி இறைக்கப்படுகின்றன. மக்களுக்கு அவை பயனை அளிக்கின்றனவா? இல்லையா? என்று அவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை.
மதிய உணவுத்திட்டத்திலிருந்து இலவச வண்ணத்தொலைக்காட்சி வரை ஏராளமான இலவச திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
நியாயவிலைக்கடைகளில் இருந்து நாம் ஆரம்பிப்போம். அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, மைதா, ரவை, பாமாயில் இன்னும் பல பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன. நம் அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தி, நியாய விலைக்கடைகளில் வழங்கப் படும் பொருட்களின் எடை/அளவு குறைவாகவே கிடைக்கும். அரிசி முதலானவை நெடி அளிப்பதாகவும், தரம் குறைந்ததாகவும் இருக்கும்.
ஆனால் அதே நியாய விலைக் கடைகளில் இருந்து மூடை மூடையாக நல்ல, தரமான, எடை குறையாத பொருட்கள் கள்ள சந்தைகளுக்கு ‘நியாயமான’ விலையில் வழங்கப்படும். அதை அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பார்கள்.
அதைத்தான் நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படுகிறது. அதை வாங்கி ரூ.7/- அல்லது ரூ.8/-க்கு கடைகளில் விற்பவர்களே அதிகம். அதை அவர்கள் ரூ.10/- முதல் ரூ.15/- வரை அரிசியின் தரத்தைக் கொண்டு விற்கிறார்கள். அதை மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். மண்ணெண்ணையும் இதே போலத்தான் ரூ12/-க்கு வாங்கி ரூ.25/- முதல் ரூ.30/- வரை விற்கப் படுகிறது. இப்படி விற்பனை செய்வதற்காகவே போலியான பெயர்களில், போலியான முகவரிகளில் ரேஷன் கார்டுகள் வாங்கப் படுகின்றன.
சர்க்கரை நல்லதாக வரும் பட்சத்தில் சர்க்கரை இருப்பில் இல்லை என்று தெரிவித்து விட்டு, அவற்றை கள்ள சந்தையில் தள்ளி விடுகிறார்கள். பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் கதையும் இதுதான்.
ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால் 800 கிராம் அல்லது 900 கிராம் மட்டுமே கிடைக்கும்.
இலவச வண்ணத்தொலைக்காட்சி கொடுத்ததன் நோக்கம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருந்தால் யாருக்கும் பசி, வறுமை இருக்காது என்று நினைத்திருக்கலாம்.
இந்த வண்ணத்தொலைக்காட்சிகளை வாங்கி மூலையில் பெட்டியோடு வைத்திருப்பவர்களே மிக அதிகம். கிடைத்த விலைக்கு விற்றவர்கள் மீதி உள்ளவர்கள். தொடக்கத்தில் ரூ.1500/- விற்பனை செய்யப்பட ‘இலவச’ தொலைக்காட்சி நாளடைவில் ரூ.500/-க்கும் ரூ.400/-க்கும் விற்கப் பட்டது. பல வீடுகளில் நான்கு, ஐந்து தொலைக்காட்சிகள் கூட இருக்கின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்? மின்சாரம் கூட இல்லாத வீடுகளில் தொலைக்காட்சி இருந்து என்ன பயன்?
பள்ளிகளில் உணவுக்காக வழங்கப்படும் அரிசி, பருப்பு, முட்டை போன்றவைகளும் கள்ள சந்தைக்கு வழங்கப் படுகின்றன. 90% பள்ளிகளில் தரமான உணவு வழங்கப்படாத காரணத்தினால், பிள்ளைகள் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சமைத்ததாக கணக்கு காட்டப்பட்டு அந்த பொருட்கள் கள்ள சந்தைக்கு விற்கப் படுகின்றன.
அரசாங்க பொது மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலவசமாகவே மருத்துவம் செய்யப் படுகிறது. பல மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருப்பதில்லை. கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களே இருப்பதில்லை. மேலும் இந்த மருத்துவ மனைகளில் நிலவும் சுகாதாரமற்ற தன்மை, இங்கு பணிபுரிபவர்களின் அலட்சியமான கவனிப்பு, அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப் படுதல், தாமதப் படுத்தப் பட்ட மருத்துவம், காலாவதியான அல்லது பற்றாக்குறையான மருந்துகள் இப்படிப் பல காரணங்களால் இங்கே மருத்துவம் பெற பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு மருத்துவம் பார்க்கச் செல்வோருக்கு, பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டுப் பின் அரைகுறையாக மருத்துவம் பார்க்கப் படுகிறது. மருதுவனைகளில் வேலை பார்ப்பவர்களை ‘கவனித்தால்’ நமக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். அல்லது யாருடைய சிபாரிசாவது கிடைத்தால் ராஜவைத்தியம் பார்க்கப்படும். எல்லோருக்கும் சிபாரிசு கிடைக்குமா?
இங்கே மருத்துவம் பெற விரும்பாமல் கடனை வாங்கியாவது தனியார் மருத்துவ மனைகளில் எவ்வளவு பணம் கொடுத்தேனும் மருத்துவம் பெறுவோரே அதிகம்.
சுகாதார துறையில் வேலை பார்ப்பவர்களே இங்கு மருத்துவம் பார்த்துக்கொள்வதில்லை. எந்த அதிகாரியும், சட்ட மன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஏன் நமது முதல்வரே கூட அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள வருவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் ராஜவைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள்.
இப்படி இலவசமாக வழங்கப்படும் அனைத்து விஷயங்களிலும் ஏதேனும் ஒருவிதத்தில் சேவைக்குறைபாடோ அல்லது சரியான படியோ நமக்கு அந்த சேவை கிடைப்பதில்லை.
இதை நாம் வழக்கமான, பழக்கமான ஒன்றாக கருதத் தொடங்கிவிட்டோம்.
இவற்றை பற்றி நாம் புகார் தெரிவித்தாலோ அல்லது தட்டிக் கேட்டாலோ நமக்கு கிடைக்கும் பதில் “இலவசமாக/குறைந்தவிலையில் கிடைத்தால் அப்படிதான் இருக்கும். கொடுப்பதை வாங்கிக் கொண்டு போங்கள்” என்பதுதான். மக்களும் இதை ஒரு உரிமையாக கோர முடியவில்லை.
இலவசங்கள் வழங்கப்படுவது மக்களின் வரிப்பணத்தில். அவர்களின் நோக்கம் வேண்டுமானால் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் தருவதை விட பதுக்கல், மோசடி, ஊழல், கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவே இருக்கிறது.
அரசின் இத்தகைய இலவச திட்டங்களால் ஏற்படும் பயன்களை விட தீமைகளே அதிகம்
தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பேருந்துகள் போன்றவற்றில் கட்டணமாக பெறப்படும் தொகை அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணங்களை விட மிக மிக அதிகம்.
அரசுப் பள்ளிகளில் கட்டணம் கிடையாது. ஆனால் அங்கே தரமான கட்டிடங்கள், போதுமான அடிப்படை வசதிகள், தரமான கல்வி தரப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில், பள்ளிகளில் வாங்கப்படும் கட்டணங்களுக்கு முறையான கணக்கு காட்டப்பட்டு முறையான வரி கட்டப்படுகிறதா?
அரசு நிர்ணயித்த கட்டணங்களைத்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்குகின்றனவா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் ‘இல்லை’ என்பதுதான்.
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் வாய்க்கு வந்த கட்டணங்களை நிர்ணயித்து மிக அதிகமாக வாங்குகின்றனர்.
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான கல்வியும், மருத்துவமும் இன்றைக்கு மிக அதிகமான லாபத்தை ஈட்டித் தரும் தொழில்கள் ஆகி விட்டன. காய்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
.
இன்னும் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற வேண்டாம்.
இதற்குப் பதிலாக அரசே இலவசமாக/விலை குறைவாக விற்பதற்குப் பதிலாக ‘நியாயமான’ விலையிலேயே நியாய விலைக் கடைகளில் விற்கலாம். பதுக்கல், மோசடி, கள்ளசந்தைக்குக் கடத்தல் போன்றவைகளைத் தடுக்கலாம். வெளி மார்க்கெட்டை விட சற்றே குறைவாக, சரியான எடையில் பாக்கெட்டுகளாக விற்பதன் மூலம் மக்கள் உண்மையிலேயே பயன்பெறும் வகையில் விற்பனை செய்யலாம்.
குறைவான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தரமான மருத்துவம் தரலாம். இலவசமாகப் பெறாமல் கட்டணம் கொடுப்பதால் மக்களே தரமான சேவையை உரிமையாக கேட்டுப் பெறமுடியும்.
அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
நல்ல வசதிகளுடன் கூடிய தரமான கல்வியை சரியான கட்டணத்தில் அரசுப் பள்ளிகளில் அளித்தால் தனியார் பள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சரியான கட்டமைப்புடன், முறையான வசதிகளுடன் நியாயமான கட்டணம் நிர்ணயித்து தரமான சேவை வழங்கும் பட்சத்தில் மக்கள் இலவசமாக கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் காலம் வந்து விடும்.
மக்களுக்கு இலவச ‘சேலை வேட்டி’ வேண்டாம் அவர்கள் வளம் பெற ‘வேலை வாய்ப்பு’ ஏற்படுத்திக் கொடுங்கள்.
மக்களுக்கு இலவச ‘புழுத்த அரிசி’ வேண்டாம். நியாயமான விலையில் நல்ல ‘புழுங்கல் அரிசி’ கொடுங்கள்.
இலவசங்கள் சிலர் மட்டும் பயன் பெரும் வகையில் இருப்பதால் அவற்றை நிறுத்தி விட்டு பலரும் பயன் பெரும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் !!!
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !!!






2 comments:
ராஜேஷ் தங்களின் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் பொழுது, எனக்கு விகடனில் சமீபத்தில் படித ஜோக் ஞாபகம் வந்தது. அந்த ஜோக்:
மனைவி: "தினமும் ஏன் இப்படி குடிச்சுத் தொலைக்கிற?"
கணவன்: "நான் டாஸ்மாக்ல குடிக்கலைன்னா, உனக்கு ரேஷன்ல ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்காதுடி"
இதெப்டி இருக்கு?
denirin puthiya vadivathirkku vazhathukal
Post a Comment